Aadhavan Siddhasahram Treatment

உலகில் பல்வேறு இனங்கள் இருக்கும் போதிலும் அவர்கள் அனைவருக்கும் தனித்துவமான மருத்துவமுறை என ஒன்று இருக்கவில்லை, ஆனால் தமிழரின் பெருமையை நிலைநாட்டும் விதமாக சித்த மருத்துவம் என்பது தமிழர்க்கே உரிய மிகத் தொன்மையான மருத்துவ முறைகளுள் ஒன்றாகும். சித்தர்களின் தவ வலிமையால், ஞானத்தால் கண்டறியப்பட்டதின் பேரில் சித்த மருத்துவ முறை என்று அழைக்கப்படுகிறது.

இதனை கண்டறிந்த விதம் மிகவும் சுவாரசியமானது. திருமூலர் ஒரு பாடலில் “அண்டத்தில் உள்ளதே பிண்டம், பிண்டத்தில் உள்ளதே அண்டம்” என்று கூறுகிறார். எதுவெல்லாம் இவ்வுலகில் உள்ளதோ அதுவெல்லாம் நம் உடலின் வடிவில் உள்ளது, என்பதின் இலக்கணமாக சித்த மருத்துவம் விளங்குகிறது. ஒரு பொருளின் நிறம் வடிவம் தன்மை ஆகியவற்றை வைத்து அவை எந்த வகையான மருத்துவத்துக்கு பயன்படுத்தலாம் என்று அறிந்தனர். இதய வடிவில் உள்ள இலைகளான அரச இலை, வெற்றிலை இவற்றை இதய நோய் மற்றும் இரத்த அழுத்த நோய்க்கு பயன்படுத்தினர். சிறுமூளை வடிவில் உள்ள வல்லாரை கீரையை நினைவாற்றல் மருந்தாகவும், நுரையீரலை ஒத்து இருக்கும் தூதுவளை இலையை சுவாசம் சார்ந்த கோளாறுகளுக்கு பயன்படுத்தினர்.

கீழா நெல்லி என்பது நம் உடலிலுள்ள பித்தப்பை வடிவில் இருக்கும், மஞ்சள் காமாலை நோய்க்கு கீழாநெல்லியை விடவும் சிறந்த மருந்து இல்லை என்று நவீன மருத்துவர்களே ஒப்புக் கொள்கின்றனர்.

அதே போல் கணையத்தை ஒத்து இருக்கும் நாவல் விதை இன்சுலின் சுரப்பு குறைபாடுகளுக்கு சிறந்த தீர்வாகும்.இது போல பல நோய்களுக்கு தீர்வுகள் உள்ளன [அக்காலத்தில் இதய, கணைய வடிவம் இன்னதென எப்படி தெரியும் என்று கேட்பவர்களுக்கு தெரிவிப்பது; அன்றே நாம் ஒட்டு சிகிச்சை, அறுவை சிகிச்சை மற்றும் உடல்கூறு, உடலியல் ஆகியவற்றில் வல்லமை பெற்றிருந்தோம்].

நம் சித்த மருத்துவ முறை பண்டைய காலத்தில் தென்னாடு எனப்படும் தற்கால தமிழ் நாடு கேரளம்,ஆந்திரம்,கர்நாடகம் ஆகிய பகுதி முழுவதும்பரந்து விரிந்து இருந்தது.பதினெட்டு சித்தர்களில் ஒருவரான போகர் பறக்கும் சித்து வல்லமை பெற்றவர். சித்தர்கள் அஷ்டமா சித்து எனப்படும் எட்டு வகை சித்துக்களில் ஏதேனும் ஒன்று கொண்டிருப்பர் அவை அணிமா- உடலை அணு அளவில் சுருக்குதல், மகிமா- உடலை மலைபோல் பெரிதாக்கல், கரிமா- திடப்பொருளாக மாற்றல், இலகிமா- பறவை பொல இலகுவாகி பறத்தல், ப்ராத்தி- தேவையானவையை அடைதல், ப்ரகாமியம்- இயற்கையை வென்று எங்கும் போகும் திறன், ஈசாத்துவம்- உருவாக்கல் காத்தல் அழித்தல், வசித்துவம்- வசிகரித்தல். அதன் மூலம் போகர் இலகிமா சித்தைக்கொண்டு அக்காலத்திலேயே சீனம் வரை சென்று மூலிகைகளை கொண்டு வந்து இருக்கிறார். மேலும் சில ரச வாதங்களை கொண்டும் மருந்திட்டு உள்ளார். ஒன்பது மூலிகை மருந்துகளை கொண்டு பழனி முருகன் சிலையை வடித்திருக்கிறார்.இப்படி அக்காலத்தில் பல எல்லைகளைத் தொட்டு சித்தர்களின் பல ஆய்வுகளினூடே உருவாக்கப்பட்ட சித்த மருத்துவத்துக்கு இன்று பெரும்வாரியான முக்கியத்துவம் தரப்படுவதில்லை.

அறிவியல் என்ற போர்வையில் வந்த நவீன மருத்துவத்தின் தாக்கத்தால் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆய்வுக்குட்பட்டு கண்டறியப்பட்ட சித்த மருத்துவமுறை புறம் தள்ளப்பட்டு அறிவியல் முறையிலான ரசாயன மருந்துகள் வழங்கப்படுகின்றன. கொஞ்சம் கொஞ்சமாக சித்த மருத்துவம் அழிந்து வருகிறது. இதற்கு காரணம் என்னவென்றால் மேற்கத்திய கலாச்சாரத்தின்தாக்கத்திற்கு நாம் அடிமை ஆகி வருவதே ஆகும். ஏனெனில் சித்த மருத்துவத்தின் மூலக்கரு “எது நமது உணவாக இருக்கிறதோ அதுவே மருந்தாக இருக்க வேண்டும்” என்பதே.

ஆனால் நம்மில் பலர் மேற்கத்திய ருசிக்கு அடிமைப்பட்டு அந்நிய உணவுகள் என்ற வகையில் பிட்சா, பர்கர், குளிர்பானம்,செயற்கை வளர்ச்சி கோழி போன்ற இயற்கையை விட்டு விலகிய உணவுகளை அருந்த தொடங்கியதின் காரணமாக நம்மை அறியாமலே நம்முள் நோய்கள் பல விதைக்கப் படுகின்றன. மேலும் உடற்பயிற்சியின்மையும் நோய்கள் உருவாக ஒரு முக்கிய காரணமாகின்றது. பின்பு அதற்கு ஆங்கில மருத்துவத்தையும் நாடுகிறோம்.எந்த ஒரு நோயும் ராம் கோபால் வர்மா படம் போல ஒரே வாரத்தில் வந்துவிடுவதில்லை, அது நமது ஷங்கர் படத்தை போல பல ஆண்டுகள் எடுத்து மெல்ல மெல்ல உடலில் புகுந்து ஒரு நோயாக உருவெடுக்கிறது. எந்தொரு நோய் வந்தவரின் முந்தைய மூன்று ஆண்டுகால வாழ்வை ஆராய்ந்தாலும் இந்த உண்மை புரியும்.

Leave a Comment